அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து அந்நியப்படுவீர்கள் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கிலோ ரூ.150-ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் வெங்காய விலையேற்றம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் அநியாய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது. தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்று கிடுகிடு விலையை வேகமாக எட்டிப் பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டு விட்டது.
இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள். வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடிவிட்டது. கடலூரில் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாகக் கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். ஆட்டோவில் ஏறிய ஒருவர், பணத்துக்குப் பதிலாக வெங்காயம் கொடுத்ததாக 'வாட்ஸ் அப்பில்' தகவல் வருகிறது. வைர நகைகள் மாதிரி, வெங்காயத்தில் நகை செய்வதாக ஒரு விளம்பரம் பார்த்தேன்” இவ்வாறு விலையேற்றத்திற்கு பல உதாரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ” மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மிக முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம், ஏழை - எளிய - நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகி விட்டது. மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக் கிடக்கிறது. வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும் நியாய விலையிலும் கிடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப்போவீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.