கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்டங்களுக்கு அனுப்புமாறு அதிகாரிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டமூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் நடந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வருவாய்த் துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், ஐஏஎஸ் அதிகாரிகள் முருகானந்தம், உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
வரும் 6 ஆம் தேதியில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் விதம், 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நாட்களில் அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏழாம் தேதி புதிய அரசு பதவி ஏற்கும்நிலையில், கொரோனாவையொட்டி பதவி ஏற்பு விழாவை எளிமையான முறையில் நடத்துவது பற்றியும் பேசப்பட்டதாக தெரிகிறது. நேற்றும் மூத்த அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.
தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உடனான இந்த ஆலோசனையில், கொரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் தேவையான மருந்துகள், மருத்துவர்கள், ஆக்சிஜன் இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பவும் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மே 6ஆம் தேதியிலிருந்து புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகவுள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்துவது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார்.
மேலும் , முழு ஊரடங்கு குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.