வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 எம்எல்ஏ-க்கள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்க சென்றனர். முதலமைச்சர் அங்கு இல்லாததால் அவரது செயலாளரிடம் கடிதத்தை ஒப்படைத்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'வேளாண் சட்டங்கள் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் வேளாண்மை உள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், வேளாண்மை தொடர்பான சட்டங்களை இயற்றும்முழு அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டம் இயற்றியிருப்பதை நாம் வேடிக்கை பார்க்கவும், ஏற்றுக் கொள்ளவும் இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.