டெல்லியில் மே 30 ஆம் தேதி நடைபெற உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது.
மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கிறார். இந்தப் பதவியேற்பு விழா வரும் 30 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடக்கிறது. இதில் நம் நாட்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக சார்பில் ஆ.ராசா மற்றும் டிஆர் பாலு ஆகியோர் விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.