‘நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க’ : பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க’ : பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
‘நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க’ : பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்திவருகிறார். இதில் பங்கேற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நீட் தொடர்பாகவும், தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். காணொலி வாயிலான அந்த சந்திப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளின் விவரங்கள் பின்வருமாறு:

‘பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் தேர்வு நடத்துவது, கொரோனா பரவ வழிவகுக்கும். ஆகவே நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை நீங்கள் மறுபரீசிலனை செய்ய வேண்டும். 

கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு, சேவை வரி விலக்கு அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை 6% என்பதிலிருந்து குறைத்து, தமிழ்நாடு அரசு அதை முற்றிலுமாக தவிர்த்தும் வருகிறது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டுக்கு தடுப்பூசியின் தேவை அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டுக்கென ஒதுக்கப்படும் தடுப்பூசியின் அளவு, மிகக்குறைவாக உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, ஏற்கெனவே கோரியிருந்ததைபோல ஒரு கோடி தடுப்பூசிகளை  மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்தவகையில் பிரதமராகிய உங்களின் ஆதரவு தமிழ்நாட்டுக்கு தேவை. அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க, தமிழ்நாடு அரசு தனது முழு முயற்சியையும் செய்துவருகிறது. அதேநேரம், மூன்றாவது அலையை சமாளிக்க ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிறைய உதவியை வழங்க வேண்டும்.

முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் கூடுதல் அரிசி சலுகையை, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுப்படுத்தியுள்ளது. தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும், ஒன்றிய அரசு இதை விரிவுப்படுத்தவேண்டும்’’ ஆகிய கோரிக்கைகளை முதல்வர் முன்வைத்தார்

இவற்றுடன், “கொரோனா தடுப்புப் பணிகளில் நீங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் தேவையை புரிந்து அவற்றை அதிகப்படியாக வழங்கியமைக்கும், நன்றி” என்று கூறினார்.

மேலும் பேசியபோது, “கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை புதிதாக பொறுப்பேற்ற ஒரு அரசு எதிர்கொள்ளும் மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே இருந்தது. அந்தவகையில் எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, நோய்ப்பரவலையும் உயிரிழப்பையும் கட்டுப்படுத்தியுள்ளது. கொரோனா பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 14 இலவச மளிகை பொருட்கள்,  4,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்பட்டுள்ளது” என்ற தகவலையும் பகிர்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com