தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 - 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி) முதல்வர் ஸ்டாலினால் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருவள்ளூர் கீழச்சேரி புனித அன்னாள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இன்று, காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இந்த காலை உணவுத் திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் 2.23 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். முன்னதாக “காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்” என கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர், முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டார். அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு அவர்களுடன் பேசியபடி தானும் உணவருந்தினார்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “வெல்வேறு திட்டங்கள் மூலம் உங்களுக்கு பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு உருவாக்கிய திட்டம்தான் இது.
அரசாங்கத்திற்கு எவ்வளவு நிதி நெருக்கடி இருந்த போதிலும், பசியோடு குழந்தைகள் பள்ளி செல்ல கூடாது என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, காமராஜர் பிறந்தநாளான இன்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இத்திட்டமான என்று அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் கேட்டனர். இதன் காரணமாகவே 18,50,000 மாணவர்கள் வயிறார உணவு உண்பதற்காக இத்திட்டம் இன்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும், 2,23,000க்கும் அதிகமான மாணவர்கள் உணவு உண்டு இதன் மூலம் பயனடைய இருக்கிறார்கள்.
சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், காலை உணவுத் திட்டத்திற்கு செய்யப்படுவது நிதி அல்ல, எதிர்காலத்திற்கான முதலீடு. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, காலை உணவுத் திட்டம் என்பது வரப்பிரசாதம்.
ஆனால், ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்களுக்கு நம்மை பாராட்டுவதற்கு மனமில்லை... அதுபற்றி நமக்கு கவலையும் இல்லை. நமது அரசு ஒருநாளாவது செயல்படாமல் இருந்திருக்கிறதா? நாள்தோறும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். பொய் செய்திகளை பரப்பி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜன்டா பலிக்காது.
இங்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பின்புதான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஏன்... கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த நேரத்தில் அனைத்து அதிகாரிகளையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், காலை உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது .உங்கள் குழந்தை சாப்பிடும் உணவை எவ்வளவு கவனமாக பார்க்கிறீர்களோ, அதேபோல இவர்களையும் மிகுந்த கவனம் எடுத்து கொள்ள வேண்டும். நான் பல பள்ளிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறேன். இதே போல அனைத்து அமைச்சர்களும் திடீர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட மாடல் அரசை பொறுத்தவரை மாணவர்கள் படிப்புக்கான தடையாக எதுவும் இருக்க கூடாது என்பதுதான் எண்ணம். அது பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ .. மாணவர்கள் படிப்புக்கான தடையை உடைப்பதுதான் எனது முதல்பணி
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா?
தமிழகம் நீட் தேர்வை எதிர்த்தபோது முதலில் கேள்வி எழுப்பியவர்கள் கூட, தற்போது நீட் தேர்வில் எழுந்த முறைகேடுகளை கண்டு தற்போது ஆதரிக்கின்றனர். மாணவ சமுதாயம் போர் கொடி தூக்குகிறது. நாட்டு தலைவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.
ஒட்டு மொத்த இந்தியாவே தமிழ்நாட்டின் வழி நீட் தேர்வை எதிர்க்கிறது. எனவே, நம்மை பொறுத்தவரை நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை தேவையற்றது. ஆகவேதான், இதனை எதிர்க்கிறோம். ஒருபுறம் அரசியல் மற்றும் சட்டப்போராட்டங்களை நடத்துகிறோம்.
மற்றொரு புறம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். ஆகவே, மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. ஆகவே, ’படிங்க..நீங்க உயர படிங்க..’ நீங்க உயர, இந்த வீடும் உயரும், நாடும் உயரும்.. ” என்று மாணவர்களை வாழ்த்தி உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து மப்பேடு பகுதியில் விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்யும் இரண்டு பேருந்துகள் உட்பட 10 புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்தார் முதல்வர். இந்நிகழ்வுகளில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், திருவள்ளூர் எம்.பி.சசிகாந்த் செந்தில் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.