சென்னை விமானப்படை நிகழ்ச்சி|உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் - முதலமைச்சர்

மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காணவந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்முகநூல்
Published on

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகசங்களைக் காண, பொதுமக்கள் லட்சக் கணக்கானோர் திரண்டனர். வெயில் சுட்டெரித்ததாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்டநெரிசல் நிலவியதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பல பேர் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை,அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன், பெருங்களத்தூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 90க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன. திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்று அரசியர் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காணவந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலமைச்சர் ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி | “உயர்மட்ட விசரணைக்கு உத்தரவிட வேண்டும்” - திருமாவளவன் அறிக்கை

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன்.

அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சி|”உயிரிழப்புக்கு இதுதான் காரணம்; அரசியலாக்க வேண்டாம்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத்தலைவர்செல்வப் பெருந்தகை அளித்த பேட்டியில், மேலும்,” நேற்று மெரினாவில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலா ஒரு லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் , இறந்தோரின் குழந்தைகளுக்கான கல்வி செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும்.“ என்று பேட்டியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com