தனது தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் என இணைத்துக்கொண்டார் தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் இதற்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர்.
ஏற்கெனவே ’#ChiefMinisterMKStalin’, ’#முகஸ்டாலின்_எனும்_நான்’ போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகிவரும் நிலையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் ஸ்டாலின். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் என இணைத்துக்கொண்டுள்ளார் மு.க ஸ்டாலின்.
இதனிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘முன்னாள் தமிழக முதல்வர்’ என மாற்றிக்கொண்டுள்ளார்.