ரயில் பயணத்தின்போது உரிய இருக்கை ஒதுக்காமல், பயணிகளிடம் வரம்பு மீறி பேசிய குற்றச்சாட்டில் மன உளைச்சலுக்கு ஆளான பயணிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நீதித்துறை அலுவலராக பணியாற்றும் சந்திரசேகரன் என்பவர் மாநில நுகர்வோர் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 2014 ஜூன் மாதம் கோவையில் இருந்து சென்னைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்துவிட்டு, மீண்டும் கோவைக்கு திரும்பியபோது பெற்றோருடனும் பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னைக்கு வரும்போது குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டதாகவும், மற்ற இருவருக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது தன்னையும், மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று சென்னையில் இருந்து கோவைக்கு திரும்பியபோதும் இருக்கை ஒதுக்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதனால் மூத்த குடிமக்களான பெற்றோரும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப்போல 70க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வித அறிவிப்புமின்றி ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு மற்றும் டிக்கெட் பரிசோதகரின் நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளானதற்கு நஷ்ட ஈடாக 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் ஆர்.சுப்பையா மற்றும் உறுப்பினர் வெங்கடேச பெருமாள் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வழக்கு செலவுத்தொகையக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.