தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் இதுவரை வாகனங்களுக்கு காகித வடிவில் வாகனப் பதிவுச் சான்றிதழும், ஓட்டுநர்களுக்கு லேமினேட் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிம அட்டையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழில் மைக்ரோ சிப், QR கோடு, ஹாலோ கிராம், UV இமேஜ் வியூவர், எம்பெட்டெட் சிப் போன்ற வசதிகள் உள்ளன. இந்த வகை ஸ்மார்ட் கார்டுகளை போலியாக தயாரிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். கிரெடிட் கார்டுகளுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் தகவல்களை திருடவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
QR கோடை பயன்படுத்தி விவரங்களை போக்குவரத்து அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம். உடல் உறுப்பு தானம் செய்துள்ளாரா? போன்ற தகவல்கள் இருக்கும். ஸ்மார்ட் ஆர்.சி புத்தகத்தில் வாகனத்தில் மாசு அளவு போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கும் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. பழைய உரிமம் மற்றும் ஆர்.சி புத்தகங்களை வைத்திருப்போர் புதுப்பிக்கும் போது புதிய கார்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான ஆவணங்களை வழங்கும் பட்சத்தில் ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 24 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. 2 மாத காலத்தில் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ஒட்டுநர் உரிமங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.