டெங்குகாய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத்தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தின்போது, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு, ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர்களுடன் சேர்ந்து தாமும் பல இடங்களில் ஆய்வு நடத்தியதாக தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுவதாக கூறிய அமைச்சர், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக கூறினார். இதனால் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.