மேலும் 3 பேருக்கு கொரோனா பதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பதிவில், இதுவரை கொரோனா பாதிப்புக்காகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,163 ஆக உள்ளதாகக் கூறினார். மேலும், கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15,298 ஆக இருப்பதாகவும் கூறிய அவர், மொத்தம் 9,154 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளதாகவும் அதில் தற்போது 116 பேர் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இதுவரை கொரோனா நோய்க்கான மாதிரிகளை எடுத்துச் சோதிக்கப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்பதும் அதில் 15 பேருக்கு மட்டுமே பாசிடிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதில் இன்னும் 120 பேருக்கான சோதனை நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் மேலும் ஒரு புதிய செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைர்ஸ் தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றும் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. அதில், நியூசிலாந்து நாட்டில் இருந்து திரும்பிய 65 வயதுடைய ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
55 வயதுடைய சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், லண்டனில் இருந்து திரும்பிய 25 வயது இளைஞர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.