ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளை தரம் உயர்த்த பரிந்துரைகள் வரும் பட்சத்தில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் ஓ.கே சின்னராசு கேள்வி எழுப்பினார். நான்கு மாநகராட்சிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 15 மாநகராட்சிகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கிராமப் பஞ்சாயத்துகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறினார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தாலும் நடவடிக்கை இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான பரிந்துரைகளை ஆராய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு உள்ளது எனவும் அமைச்சர் கூறினார். அந்தக்குழு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி கருத்துருக்களைப் பெற வேண்டும் என்று வேலுமணி குறிப்பிட்டார். அவ்வாறு பரிந்துரைகள் வந்தால் அதுபற்றி உள்ளாட்சித்துறை இயக்குநரிடம் பரிந்துரை செய்யப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.