உதயநிதி பெயரை சொல்லும்போதெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைகள் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ''கே.ஆர்.ராமசாமி, பி.வி.நாராயாணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் என சொல்லும் போதெல்லாம் எங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி. திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில், நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருக்கிறார்'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரசாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்தவர் உதயநிதி. ராஜராஜ சோழனுக்கு துணையாக ராஜேந்திர சோழன் இருந்ததுபோல, ராமனுக்கு துணையாக அனுமன் போல திமுக ஆட்சியமைக்க முதலமைச்சருக்கு துணையாக இருந்தவர் உதயநிதி'' எனவும் புகழ்ந்தார்.
''திரையுலகில் இருந்து புரட்சித்திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானது போல, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி முதலமைச்சர் ஆகியுள்ளதாகவும் அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிக்கிறார்'' என அமைச்சர் எவ.வேலு பெருமிதம் தெரிவித்தார்.