செய்தியாளர்: C.விஜயகுமார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கர்த்தனாதபுரம் பாலம் கட்டும் பணியை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...
“இருக்கும் கூட்டணிகளிலேயே வலுவான கூட்டணி I.N.D.I.A. கூட்டணி மட்டுமே. எதிரணியில் கதவு ஜன்னல் என அனைத்தும் திறந்திருந்தாலும் யாரும் செல்லவில்லை. காற்று மட்டுமே வருகிறது. தேர்தல் இயந்திரம் இன்றி வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இருந்த போதும் வாக்களிக்கும் இயந்திரத்தில் இந்த முறை எத்தகைய குளறுபடி நடைபெற்றாலும் திமுக தலைமையிலான கூட்டணி பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 40க்கு 40ஐ வெல்லும்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பிறரின் கவனத்தை ஈர்க்க, சாலையில் விளையாடும் சிறுவர்கள் செய்யும் செயலை போல் உள்ளது. அதனை நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்.
மக்கள் பணி, தமிழகத்தின் வளர்ச்சி, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்று இயங்கும் திராவிட மாடலில் தமிழகத்திற்கும் உலகத்திற்குமான வளர்ச்சி குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். டெல்டா-காரரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வரலாற்றில் இல்லாத வகையில் தஞ்சைக்கு சிப்காட் தொழிற்சாலையும் மன்னார்குடிக்கு சிறிய தொழில் பூங்காவும் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.