காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் சாம்சங் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்திருந்தார்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியையே அடைந்த சூழலில், போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்தது.
மேலும், போராட்டத்தில் பங்கேற்பதற்காக தொழிலாளர்கள் வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அப்போது, காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில், உதவி காவல் ஆய்வாளரை தொழிலாளர்கள் கீழே தள்ளியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 7 தொழிலாளர்களை வீடு தேடிச் சென்று கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை பிணையில் விடுவித்தது.
தொழிலாளர்கள் அமைத்திருந்த போராட்டப் பந்தலையும் இரவோடு இரவாக காவல்துறையினர் பிரித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இன்று கொட்டும் மழையிலும் போராட்டத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தனர்.
தொடர்ந்து, போராட்டத்தை ஒருங்கிணைத்த முக்கிய நிர்வாகிகள் 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களை ரகசிய இடத்தில் வைத்துள்ளதாகவும் சிஐடியூ குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை சிஐடியு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்தநிலையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்க நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார்.
அதில், “சாம்சங் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன் வந்துள்ளது. தொழிலாளர்களின் நலனும் முக்கியம், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் முக்கியம். சிஐடியூ அமைப்பு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும். காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். சிறப்பு ஊக்கத்தொகை அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலீடுக்கான உகந்த மாநிலமாக உள்ளது.
தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கக்கூடிய அரசாக இந்த அரசு விளங்குகிறது. சிஐடியூ நடத்தும் போராட்டத்தை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. தொழிற்சங்கங்கத்தை பதிவு செய்வதற்கு எதிரான மனநிலையில், அரசுக்கு இல்லை. பல தொழிற்சாலைகளில் சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்சங்க அங்கீகார கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் கூறுவதை பொறுத்துதான் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.