அனைத்து மருத்துவமனைகளிலும் தற்போது மருந்து கையிருப்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் நடந்த திருநங்கைகளின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், ''தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மருந்து தட்டுப்பாடுகள் இருந்தது உண்மைதான். அதனால் தான் அந்தந்த அரசு மருத்துவமனைகளே தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கினோம். தற்போது மருந்து கையிருப்பு அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது” என்றார்.
பின்னர் பேசுகையில், “நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தை விஷயத்தில் எந்த மருத்துவமனையை அணுகினார்கள் என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. யார் தவறு செய்துள்ளார்கள், இதில் சட்டம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து, ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து திருநங்கைகளுக்கான மருத்துவ வசதிகள் குறித்த கேள்விக்கு, “திருநங்கைகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் தேசிய மருத்துவ ஆணையம் சில விளக்கங்கள் கேட்டு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதுகுறித்து மருத்துவத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள் போன்ற குழுவினருடன் ஆலோசித்தும், திருநங்கைகள் அமைப்பினரையும் இணைந்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கப்படும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தாழ்வான பகுதியில் மருத்துவமனை உள்ளதா என்பதை கண்டறிய பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.