சிட்டுக்குருவியைக் காப்போம்: அமைச்சர் உறுதி

சிட்டுக்குருவியைக் காப்போம்: அமைச்சர் உறுதி
சிட்டுக்குருவியைக் காப்போம்: அமைச்சர் உறுதி
Published on

சிட்டுக்குருவி இனத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவை இன்று கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, விழுப்புரம் வானூர் கழுவெளியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமா? என அத்தொகுதியின் உறுப்பினர் சக்கரபாணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழுவெளியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, இன்று சிட்டுக்குருவி தினம் என்பதால், அது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

சிட்டுக்குருவி இனத்தை காக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். இவரைத் தொடர்ந்து, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், அது மேம்படுத்தப்படுமா? என்றும் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்று உறுப்பினர் வசந்தகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவர்களைத் தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கோரினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இதுதொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com