கோவையில் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக மக்களுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி.
குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
கோவையின் பல்வேறு பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், நிரம்பி வழியும் குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புட்டுவிக்கி போன்ற குளங்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். குளங்களை பார்வையிட அமைச்சர் சென்ற விதம் மக்களை ஆச்சரியப்பட வைத்தது.
இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்ல, அவரது பின்னால் அமர்ந்தபடி, பயணித்த அமைச்சரை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். ஆனால் அமைச்சருடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் உட்பட பின்னால் சென்றவர்கள் யாரும் ஹெல்மெட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காலை உணவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள சிறிய உணவகத்தில் மக்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உட்கொண்டார்.