அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக தெரிவித்தார்.
‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை’ என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 ஜனவரி மாதம் மருத்துவக் கல்லூரியில் வருடத்திற்கு 150 மருத்துவ மாணவர்களின் சேர்க்கையுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.22 கோடி செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அனிதா நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ சேவைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.பி தொல்.திருமாவளவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி,
“நீட் குறித்து அனிதாவின் பெயரை பார்க்கும் போதெல்லாம், நீட் தேர்வில் எதிர்ப்பு என்ற எண்ணம் நமது மனதில் இருக்கும். எதற்கும் சமரசம் இல்லாமல் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டம் தொடரும். பிரதமரிடமே சட்ட போராட்டம் தொடரும் என கூறிவிட்டு வந்துள்ளேன். இந்தியாவிலேயே நம்பர் ஒன் தமிழ்நாடுதான் என்ற பெயரை முதல்வர் பெற்றுள்ளார்” எனப்பேசினார்.
எம்.பி தொல்.திருமாளவன் பேசிய போது,
“மருத்துவ கல்லூரியில் உள்ள ஆடிட்டோரியத்திற்கு அனிதா என பெயர் சூட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெரம்பலூரிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கர் பேசியபோது,
“அரியலூர் மாவட்டத்திற்கு தனி முத்திரையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தமிழக முதலமைச்சர். நமது மாவட்டத்தில் எதிர்கால வளர்ச்சிக்கு தற்போதுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உறுணையாக இருப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக முன்னெடுத்த போராட்டங்களில் களத்தில் முதல் ஆளாக களத்தில் நின்றவர் அவர்.
உதயநிதி ஸ்டாலின் வீரராக, நம் முதல்வரின் முதல் தளபதியாக நம்முடைய களத்தில் நின்று போராடியவர். வருங்காலத்தில் துணை முதலமைச்சராக இங்கு வருகை தந்து இன்னும் பல வளர்ச்சி பணிகளை தருவார்” என பேசினார்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசிய போது, “இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என கொள்கை முடிவை எடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். 27 சிறப்பு துறைகளுடன் கூடிய மருத்துவ சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 147 மருத்துவர்கள் உள்ளனர். இம்மருத்துவமனையின் சேவையால் அரியலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள்” என பேசினார்.