''விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சையாகப் பொய் பேசுகிறார்'' எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரண்டாம் நாள் நேர்காணலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் மற்றும் அணியின் துணை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ''திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நேர்காணல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்று வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.
புதிய மின்சார திருத்தச் சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டனம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசின் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது திமுக உறுப்பினர்கள் அதை மிக கடுமையாக எதிர்த்தனர். தற்போது இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்ளது.
அந்த மசோதாவில் மக்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விளக்கம் இல்லை. மின்சார துறையை தனியார் மயமாக்கும் திட்டமாக அந்த சட்ட மசோதா உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வது போல் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வழிவகுக்கிறது. எனவே திமுக இதை ஒருபோதும் அனுமதிக்காது. எனவே மாதம் ஒருமுறை மின்கட்டணம் உயரும் என்பது தவறான தகவல்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். கூட்டணி கட்சியின் வெற்றிக்காக திமுகவினர் உழைப்பார்கள்.
அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்
வாட்ச் விலை கேட்டதற்கும் அதனை வாங்கிய ரசீது கேட்டதற்கும் ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்கிறார். விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சை பொய் பேசுகிறார். வாட்ச் யார் வாங்கி கொடுத்தார்கள், அல்லது வெகுமதியாக கிடைத்தது, இன்னார் தனக்கு பரிசாக கொடுத்தார் என்றாவது தெரிவிக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை அதைக்கூட சொல்லமுடியாமல் இருக்கிறார். வாட்ச் வாங்கிய ரசீதை தயாரிக்க ஏப்ரல் ஆகும் போல.
பாஜகவில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், அந்த கட்சியின் நிலைமை எப்படி உள்ளது என நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் பாஜகவினர். புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இந்த சம்பவத்தின் மீது முதலமைச்சர் சிறப்பு கவுனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்'' என்று கூறினார்.