மாணவ மாணவியர்கள் மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அமைச்சரவை பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி முடிவுகளை
எடுத்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே பள்ளி மாணவ மாணவிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி
அந்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்து கற்பிக்கப்படும் என செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், தமிழகத்தில் அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்லாந்து மற்றும்
ஸ்வீடன் நாடுகளுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பாக 10 நாள் கல்வி சுற்றுலாவிற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று நாடு திரும்பிய மாணவர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடி பரிசுகளை வழங்கினார். அப்போது
பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை வாயிலாக மாணவர்களை மேலைநாடுகளுக்கு அனுப்புவதற்கான
பணிகளை 3 கோடி ரூபாய் செலவில் நாங்கள் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
மனித நேயத்தோடும், வெளிப்படைத்தன்மையோடும் எந்தவித சிபாரிசும் இல்லாமல், இச்சுற்றுலாவுக்கு மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், மரக் கன்றுகளை நட்டால் மாணவ-மாணவிகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விவேக் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “மரம்
நடுதலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே என்று முன்பே கோரிக்கை வைத்தேன். ஆனால் இன்னும் சிறப்பு வடிவமாக இத் திட்டம்
அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.” என
தெரிவித்துள்ளார்.