ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசிடம் இல்லை என மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசிடம் இல்லை எனவும், டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தலா ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் ஆன்லைன் மதுபான விற்பனை கொண்டுவரப்படவுள்ளதாக டாஸ்மாக் ஆணையர் பேசியதாக ஒரு வார பத்திரிகையில் செய்தி வெளியானதாகவும், இதுகுறித்த திட்டம் தமிழக அரசிடம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி இவ்வாறு பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 71,000 டன் நிலக்கரி மாயமானதாகவும் ஏற்கெனவே வடசென்னை அனம் மின்நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமான நிலையில் தூத்துக்குடியிலும் மாயமானதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த விவரங்களை சேகரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.