“தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க, சாதி மத மோதல் இல்லாமல் இருக்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பருவக்கால மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா, உட்பட அதிகாரிகளும் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்றைய மருத்துவ முகாமில் சென்னையில் 82,000 பேர் பயன்பெற்றுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டு மழையின் போது நீரில் தத்தளித்த இடங்களில் 80%-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை.
அந்தவகையில் இந்த ஆண்டு பெருமழையின், மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றியுள்ளார் முதல்வர். அதனால் அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் பிரச்னைகளை சரி செய்யும் பணிகளும் சென்னையில் நடைபெற்று வருகிறது” என்றார்.
தொடர்ந்து மருத்துவ முகாம் குறித்து பேசுகையில், “அடுத்து வரும் மழைக்குள்ளாக, தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். வரும் 9ம் தேதி பெருமழை வந்தால், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை முழுவதும் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கவும் சாதி மத மோதல் இல்லாமல் இருக்கவும் முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்” என தெரிவித்தார்.