“மதுரை ஆதீனம் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளவே அப்படி பேசி வருகிறார்” என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. சாமி தரசனத்துக்குப் பின் கோவிலின் பொது தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் சேகர்பாபு.
அப்போது பேசிய அவர், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது தீட்சிதர்கள் தங்களின் நிலைபாடு குறித்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் அரசின் நிலைபாடு இந்து சமய அறநிலையதுறை சட்டங்கள் குறித்து நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும்” என்றார்.
தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறை கொள்ளைகாரர்களின் கூடாரமாக உள்ளது என மதுரை ஆதீனம் பேசியது குறித்த கேள்விக்கு, “மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளவே அப்படி பேசியுள்ளார். மற்ற ஆததீனங்கள், ஜீயர்கள், தீட்சிதர்கள் நமது அரசோடு இணக்கமாக உள்ளனர். நமது அரசு அமைவதற்கு தீட்சிதர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். எனவே ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைகூற கூடாது. அவரது பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தொடர்புடைய செய்தி: "நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்" காரணம் கூறும் -மதுரை ஆதீனம்
விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தமிழக முதல்வர் அனைவருக்குமான ஆட்சியை செய்து வருகிறார். ஆத்தீகர்கள், நாத்தீகர்கள் என அனைவருக்கும் சமமான ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி உள்ளது” என்றார். நாளை நடைபெறும் ஆய்வு குறித்த கேள்விக்கு, “ஆய்வு குறித்து மூன்று முறை துறை சார்பாக கடிதம் தீட்சிதர்களிடம் கடிதம் வழங்கபட்டுள்ளது. அவர்கள் சார்பாகவும் பதில் கடிதம் கொடுத்துள்ளார்கள். ஆலோசனை செய்து சுமூக தீர்வு காணப்படும்” எனவும் தெரிவித்தார்.