செய்தியாளர்: சுரேஷ்குமார்
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேரும், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேரும் என மொத்தம் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.
இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்ததுடன், கந்தசஷ்டி பாராயணம் பாடிய அனைத்து மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசிய போது, “மயிலாப்பூர் பாம்பன் சுவாமிகள் திருக்கோயில் குடமுழுக்கு நடத்துவதில் இருந்த சிக்கல்களை தீர்த்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட மாடல் ஆட்சியில்தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் திருக்கோயில்களில் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படுபவதுடன், திருக்கோயில் சீரமைப்பு திருத்தேர் சீரமைத்தல் போன்ற பணிகள் சிறப்புற மேற்கொள்ளப்படுகிறது.
இப்படி திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்படும் திருக்கோயில் பணிகள் காரணமாக இறை அன்பர்கள் இந்த ஆட்சியையும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் வாழ்த்துகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில்தான் திருக்கோயில் பணிகளுக்கு உபயதாரர்கள் வழங்கும் நிதி முழுமையாக அந்த நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 960 கோடி ரூபாய் நிதியை உபயதாரர்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்.
பழனி முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்றாக திருக்கோயில்களில் பள்ளி, கல்லூரி, இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று கந்த சஷ்டி பாராயணம் பாடப்படும் என இருந்தது. அதன்படி தற்பொழுது 738 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற்ற மாணவிகள் கந்த சஷ்டி பாராயணத்தை ஒப்புவித்தனர். இதுபோல 12 திருக்கோயில்களில் மாணவ மாணவிகள் பங்கேற்று பாட உள்ளனர். வடபழனி திருக்கோயிலிலும் வரும் 6ஆம் தேதி கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் தினத்தில் மட்டும் 6 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என தெரிகிறது. மேலும் தற்போது நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருகிறார்கள். பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் 500 பக்தர்கள் தங்குவதற்கான விடுதி திறக்கப்பட்டுள்ளது. 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றவரிடம்... மாணவ மாணவிகளை கந்த சஷ்டி பாட வைப்பதற்கு கூட்டணி கட்சியில் இருந்து எதிர்ப்பு இருந்தே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்...
ஆன்மிக உலகில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகளை பக்தர்கள் தேவை அறிந்து செய்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.