தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த புதன்கிழமை (05/07/23) அன்று கடிதம் எழுதி இருந்தார். அதில், “முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளில் விசாரணை தொடங்க இசைவு ஆணைக்கான ஒப்புதல் வழங்குக. நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக.
ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையையும் ஆளுநர் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இக்கடிதம் தொடர்பாக ஆளுநர் மாளிகை பதில் கடிதம் அனுப்பி தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்திருந்தது. அதில் “பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சிபிஐயின் விசாரணையில் உள்ளது. கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது
ஆளுநர் வெளியிட்ட கடிதம் குறித்து அமைச்சர் ரகுபதியை தொலைபேசி வாயிலாக நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை எப்படி ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கிறார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் தொடர்பாக நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பொத்தாம் பொதுவாக ஒரு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவர்கள் தெளிவாக சொல்லி இருக்க வேண்டும். ‘சிபிஐயிடம் இருந்து எங்களுக்கு எவ்விதமான தகவலும் வரவில்லை, அரசிடம் இருந்தும் தகவல் இல்லை’ என்று சொல்லி இருப்பார்களேயானால் முழு மறுப்பை எங்களால் தெரிவிக்க முடியும். சிபிஐ விசாரணை நடத்திவிட்டு தான் ஒப்புதலுக்கு ஆளுநரை அனுகியுள்ளனர். 12/09/2022 அன்று ஒப்புதலுக்காக சிபிஐ மூலமாகவும் அரசின் மூலமாகவும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. நாங்கள் அனுப்பிய கடிதம் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற கடிதமும் அனுப்பினார்கள்.
இரண்டாவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணியைப் பற்றி, ‘கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் கொடுக்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் கொடுத்தால் தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12/09/22 அன்று முழுமையான ஒரிஜினல் கோப்புகள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது அங்கு அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் தருவதற்கு அவசியம் இல்லை. கோப்புகள் அவரிடம் இருப்பதால் மேற்கொண்டு பிரதிகள் எடுக்க வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாவதாக ‘எம்.ஆர். விஜயபாஸ்கரைப் வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்று. 15/05/23 அன்று விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசிடம் இருந்து கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ள மூன்றும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநர் மாளிகை ஏன் உண்மைக்கு புறம்பான தகவல்களை தருகிறார்கள் என தெரியவில்லை” என தெரிவித்தார்.