சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “அத்வாலே ராமதாஸை பார்க்கும்போது நேஷனல் தலித் பந்தேர்ஸ் இயக்கம் தான் நினைவில் வருகிறது. தலித் என்ற சொல்லை இந்திய அரசுக்கு வழங்கிய இயக்கம் இவர்களின் இந்திய குடியரசு இயக்கம் தான். தலித் என்றால் சாதியின் பெயர் அல்ல; நொறுக்கபட்ட மக்கள் என்பதுதான் பொருள். தலித் மக்கள் என்றால் யார் என்பதை பொதுச்சொல்லாக கொண்டு வந்தது இந்திய குடியரசு கட்சி தான். காங்கிரஸ் கட்சி பயந்தது என்றால் தலித் பாந்தர் இயக்கத்திற்கு மட்டும் தான். இந்திய குடியரசு கட்சி அகில இந்திய அளவில் செல்வாக்குள்ள இயக்கமாக வளர்ந்தது. ஆனால் சிதறி போய் விட்டது. ராம்தாஸ் அத்வாலே வந்த பின்னர் தான் வளர்ந்துள்ளது. இவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிரியாக பார்க்கமாட்டார்கள்; நாங்களும் அவர்களை எதிரியாக பார்க்க மாட்டோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து பேசும் அளவிற்கு ராம்தாஸ் அத்வாலே அனைவரிடமும் நெருங்கிய நட்பு கொண்டவர். அவர் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அவரை தலித் பாந்தர் இயக்க பொது செயலாளராகத்தான் பார்க்கிறேன். என்னுடைய சகோதராக பார்க்கிறேன். என்ன குற்றங்கள் வந்தாலும் இன்றைக்கு தலித்களின் தனி பெரும் இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. இவர்களின் தோழமை கட்சியாகவும் உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அத்வாலே ராமதாஸ், “திருமாவளவனும் நானும் ஒன்றாக இணையும் போது இந்தியாவில் பெரிய மாற்றம் ஏற்படும். தலித் பாந்தராக இருந்த காலத்தில் ரயிலில் தமிழ்நாட்டில் வலம் வந்தது உண்டு. தலித் என்றால் என்ன என்று திருமாவளவன் கூறினார். தலித் என்றால் இவர்கள் தான் என்று கொண்டு வந்தது தலித் பாந்தர் இயக்கம் தான். அப்படிப்பட்ட இயக்கத்தை நான் கட்டி எழுப்பியபோதும் நான் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த இயக்கம் களைக்கபட்டு பின்னர் இந்திய குடியரசு கட்சி எழுப்பப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலம் தமிழகம் முழுவதும் தலித் இயக்கத்தை கொண்டு சென்றது தொல் திருமாவளவன். திருமாவளவன் இளைஞர்களின் எழுச்சி நாயகன். திருமாவளவன் நான் தலித் பாந்தர் என்றார்; அதே போன்று நானும் சொல்கிறேன் நான் ஒரு விடுதலை சிறுத்தை.
குடியரசு கட்சியின் சிறுத்தை, அது விடுதலை சிறுத்தைகள் தான். நாடு முழுவதும் நாங்கள் மலை நாட்டு மக்களிடையே எழுச்சி ஏற்படுத்தியது போல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எழுச்சி ஏற்படுத்த வேண்டும். நாகாலாந்தில் இரண்டு எம்.எல்.ஏக்களை உருவாக்கி உள்ளோம். அதேபோல் நீங்களும் உருவாக்க வேண்டும். பாஜகவில் கூட்டணியில் உள்ளோம். ஆனால் அவர்கள் கொள்கை வேறு; எங்கள் கொள்கை வேறு. குடியரசு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தோள் கொடுக்கும் தோழமை கட்சி. தமிழ்நாட்டில் அல்ல; இந்தியாவில் திருமாவளவனுக்கு மிரட்டல் ஏதும் வந்தால் அதனை தூள் தூளாக மாற்ற நான் இருக்கிறேன்.
அம்பேத்கர், அரசியல் அமைப்பு சட்டத்தை வகுக்காமல் விட்டிருந்தால் இந்தியா மிகவும் ஏழ்மை நிலைமைக்கு சென்றிருக்கும். அந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் யாராலும் கைவைக்க முடியாது. இந்திய குடியரசு கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கன்னியாகுமரியில் மிக பெரிய அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவ்வாறே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்” என்றார்.
முன்னதாக, தமிழக அரசியல் கட்சிகளிலேயே பாஜகவை கடுமையாக எதிர்க்கின்ற கட்சிகளில் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். தங்கள் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தாலே ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறும் திருமாவளவன், எப்படி பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை தங்கள் தோழமை கட்சி என கூறுகிறார் என்பது கேள்வியாகவே உள்ளது. திமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் கூட்டணியை விட்டே வெளியேறிவிடுவோம் என்று திருமாவளவன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.