”பெயரை நீக்குவது நீங்களா? நாங்களா?” - பேரவையில் பட்டியலிட்ட அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் பேசுகையில், “ஜெயலலிதா பெயரை நீக்க நாங்கள் நினைக்கவில்லை. மீன்வளப் பல்கலைக்கழகம், இசை பல்கலைக்கழகத்தில் ஜெயலலிதா பெயரில்தான் உள்ளன” என தெரிவித்தார்.
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதா பெயரிலேயே பல்கலைக்கழகம் இயங்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் பேசினார்.
இறுதியாக பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “பெயர் வைப்பது தான் கடந்த ஆட்சியில் இருந்தவருக்கு நோக்கமாக இருந்ததே தவிர, போதிய இடமோ நிதியோ கூட ஒதுக்கப்படவில்லை. அப்படி கடந்த ஆட்சியில் கருணாநிதியின் பெயர் அதிமுக அரசால்தான் பல இடங்களில் நீக்கப்பட்டது. அதோடு கலைஞர் பெயரை சிறுமைப்படுத்தியவர்கள் அவர்கள்தான். உதாரணத்துக்கு,
* கலைஞர் காப்பீடு திட்டத்தை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றம் செய்தது அதிமுகதான்.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை பசுமை வீடு வழங்கும் திட்டம் என மாற்றியது.
* செம்மொழி பூங்காவில், கலைஞரில் பெயரை செடி, கொடிகளை வைத்து மறைத்தது அதிமுக.
* அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அண்ணா சிலையில் கீழ் இருந்த திறப்பாளர் கருணாநிதி பெயரை மறைத்து அதிமுக.
* கடற்கரை பூங்காவில் இருந்த கருணாநிதி பெயரை மாற்றியது அதிமுக
* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி பெயரை அகற்றியது அதிமுக
* ராணிமேரி கல்லூரியில் இருந்த கலைஞர் மாளிகையில் இருந்த பெயரை அகற்றியது அதிமுக
* காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் கல்வெட்டில் இருந்த கருணாநிதி பெயரை மாற்றியது அதிமுக
* திருவாரூரில் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கல்லூரிக்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி பெயரை அகற்றியது அதிமுக” என இவற்றை பட்டியலிட்ட அமைச்சர், தொடர்ந்து “ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதால் கல்லூரிக்கு பெருமைதான். மட்டுமன்றி கல்வி வளர்ச்சிக்காக தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுகிறது” என்றும் பொன்முடி தெரிவித்தார்.