விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டு வழங்கினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிடல் மாடல், படிக்கும் போதே பொதுஅறிவை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும், உலக அறிவை பெற புத்தகங்களை அதிகமாக படிக்க வேண்டும். மாணவர்கள் இப்போது இரவு 12 மணியானாலும் செல்போன் பயன்படுத்துகிறார்கள், செய்திகள் உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை இந்தியாவிலேயே வழங்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான்” என்று பெருமையாக பேசினார்.
உடன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் காலம் வருமென்றும், அப்போது மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் வருமென்றும் பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் ஆட்சியில் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் காலம் வரும், மாணவர்கள் தினசரி நாளிதழ்கள் படிக்கவேண்டும், தொலைக்காட்சியை பார்க்க வேண்டும்” என வலியுறுத்திய அமைச்சர் பொன்முடி பொழுதுபோக்கிற்காக தானும் செல்போனில் நாடகம் பார்ப்பேன் என தெரிவித்தார்.