கடந்த ஆண்டை விட வணிவரித்துறையில் 24 ஆயிரம் கோடி ரூபாயும், பதிவுத்துறையில் 3500 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு "மகிழட்டும் மாற்றுத்திறனாளி வழங்குவோர் திராவிட போராளி" என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூர் அருகே பாடி இளங்கோ நகர் பகுதியில் நடைபெற்றது. ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் எல்பிஎஃப் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு, ஆகியோர் கலந்துகொண்டு 300 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், அரிசி, 1500 ரொக்கம் அடங்கிய தொகுப்பு மற்றும் 5 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மாற்றுத்திறனாளி இருச்சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி, கடந்த ஆண்டை விட வணிகவரி துறையில் 24 ஆயிரம் கோடி அதிகம் கூடுதல் வருவாய் வந்துள்ளதாகவும், அதில் ஏறத்தாழ 1 லட்சத்து 6ஆயிரம் கோடியில் இழப்பீடு தொகை 16 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தமாக 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் வந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் பதிவுத்துறையில் 16 ஆயிரத்து 300கோடி ரூபாயில் கடந்த ஆண்டை விட 3500கோடி ரூபாய் அதிகமாக வருவாய் வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பத்திரப்பதிவில் நடைபெற்றுள்ள முறைகேடு சம்பந்தமாக இதுவரை 15 ஆயிரத்திற்கு மேல் விண்ணப்பங்களில் 2000க்கும் மேல் தீர்வு காணப்பட்டு சொத்துக்களை மீட்டு கொடுத்துள்ளதாகவும், படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், விண்ணப்பங்கள் அளிக்கப்படும் நிலையில் மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.