தமிழ்நாட்டில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்திருப்பதாகவும், இதுகுறித்து முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை தொடர்ந்து, பள்ளிகள் அனைத்திலும் ஆன்லைன் வழி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்திருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளோம். அதுகுறித்த ஆலோசனை முடிந்துள்ளது. பிற மாநிலங்களில் எல்லாம் இந்த நடைமுறை வழக்கத்துக்கு வந்துவிட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் அதை பின்பற்ற உள்ளோம். நேரடி வகுப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. சுழற்சி முறை இல்லாமல் எப்போதும் போல பள்ளிகள் நடைபெறும். எங்களுக்கு உள்ள ஒரே சவால், முழுமையாக பாடத்திட்டத்தை முடிப்பபதுதான். அதையும் முறியடிப்போம். பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்க அனுமதி கிடைத்தால் வழக்கம்போல மே மாதம் தேர்வுகள் நடைபெறும்.
முறையான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார். இன்னும் சில மணி நேரங்களில் முதல்வர் அந்த அறிவிப்பை வெளியிடுவார்.
தற்போதுவரை தமிழகத்தில் 90 சதவீத்திற்கு மேல் 15 முதல் 18 வயதுடைய மானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆகவே நேரடி பள்ளிகள் மட்டுமன்றி, நேரடி பொதுத் தேர்வுகளும் தமிழகத்தில் கட்டாயம் நடைபெறும்” என கூறினார்.