செய்தியாளர்: நவ்பல் அஹமது
கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 அயலக தமிழ் இளைஞர்களை திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது... “பல மாநிலங்களின் தாய்மொழியை நசுக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பை மத்திய அரசு செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. திருச்சி விமான நிலையத்தில் புதிய கட்டட கல்வெட்டில் சமஸ்கிருத மொழி இடம்பெற்றுள்ளதற்கு கண்டனம். மொழி திணிப்பு, மத திணிப்பு, கலாச்சார திணிப்பு போன்ற வேலைகளை செய்த காரணத்தால்தான் தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடம் கிடைத்தது.
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில், தங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதே மத்திய பா.ஜ.க அரசின் வேலையாக உள்ளது. பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறும் பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ததில்லை. ஒலிம்பிக் வீராங்கனை தகுதி நீக்க விவகாரத்தில், சமூக வலைதளங்களில் மக்கள் பாஜக அரசை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். 132 வீரர்களுக்கு 140 அரசு அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். அவர்கள் என்ன செய்தார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பங்களாதேஷ் விவகாரத்தை எரியும் தீயில் பிடுங்கியது மிச்சம் என்பது போல் கதை கூறுகிறார். அவர்கள் நெருக்கடியில் இருக்கும்போது, அந்த நாட்டின் அமைதி பற்றிதான் பேச வேண்டும். இது போன்ற குறுக்கு வழி சித்தாந்தங்களை பேசக்கூடாது. தொழிற்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது” என்று கூறினார்.