சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் (ஆஸ்திரேலிய நிறுவனம்) பற்றிய தொடக்க விழாவில் பங்கேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் உரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “நம் தமிழ்நாட்டில் எவ்வளவு வாய்ப்புகள், கட்டமைப்புகள், வசதிகள் இருக்கின்றன என்பது குறித்தெல்லாம் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. போதிய விளம்பரமும் இல்லை. நம் நாட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் அவர்களுக்கு எந்த மாதிரியான சூழ்நிலையும் வாய்ப்பும் இருக்கிறதென தெரிய வாய்ப்பில்லை. அதற்காக தான் யுமாஜின் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்பட்டது. மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து இது மாதிரியான மாநாடுகளை நடத்தி, மக்கள் வாய்ப்புகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் இலவசம் கொடுத்தால் பிரதமர் விமர்சிக்கிறார். ஆனால் தற்பொழுது கர்நாடக தேர்தலில் பல இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக அவர் கட்சியே அறிவித்திருக்கிறது. இது அவரின் (பிரதமர்) இரட்டை வேடத்தை காட்டுகிறது.
கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து குழுக்களை அமைத்துள்ளார். இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் புதிதாக கொண்டு வர இருக்கிறோம்.
இல்லம் தோறும் இணைய வசதி வழங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 5, 6 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் அத்திட்டம் செயல்படுத்தப்படும். அதன் பிறகு இணைய வசதி பிரச்னை இருக்காது” என்றார்.