கடந்த இரு தினங்களாக சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாவதாக ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் இரண்டு நாட்களாக பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அமுல், குளிர் பால் கிடங்குகளை அமைத்து பால் கொள்முதல் செய்வதன் காரணமாக ஆவினுக்கு பால் வரத்து குறைந்திருக்கலாமோ என சந்தேகிக்கிறோம்.
நேற்றிரவு பணிக்கு வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும் பால் பாக்கெட்களை அடிக்கு கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் டப்புகள் பற்றாக்குறை இருந்தது. அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் ஆகிய பால் பண்ணைகளிலிருந்து ஆவின் பால் உபயோகத்திலும் தாமதம் ஏற்பட்டது. இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் பால் வரத்து குறைந்ததுதான்” என குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இன்று காலை 6:30 மணி நிலவரப்படி பத்துக்கும் மேற்பட்ட வினியோக வாகனங்கள் பால் பாக்கெட்களை ஏற்றாமல் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்குள்ளேயே நின்றதாகவும், இதனால் குறித்த நேரத்திற்கு பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் தொடர்ந்து அவதியுற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
தாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்ட காரணத்தால் மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் 50,000 லிட்டருக்கு மேல் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து பூந்தமல்லி, திருவேற்காடு போன்ற புறநகர் பகுதிகளில் நாம் விசாரித்தபோது சற்று தாமதமாக தான் பால் வந்ததாகவும் எனினும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் தங்களுக்குத் தேவையான பாலை பொதுமக்கள் வாங்கிச் செல்வதாகவும், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்குள் தாமதமின்றி பால் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் தட்டுப்பாடு ஏற்பட்டதா என்பது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர், “ஆவின் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை திமுக அரசுக்கு இருக்கிறது. ஆவின் பொருட்கள் யாவும் தரம் உயர்த்தப்பட்டு தட்டுப்பாடுன்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்றார். அமைச்சரின் பேட்டியை இங்கே காண்க...