நேற்றைய தினம் ஆவின் முன்பாக போராடிக் கொண்டிருந்தவர்களில் பலரும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களாகவும், 12 ஆம் வகுப்பிற்குச் செல்ல இருந்தவர்களாகவும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களிடம் பேசியபோது, ஆவின் உப பொருட்களான ஐஸ்க்ரீம், மில்க்ஷேக் போன்ற பொருட்களை பேக்கிங் செய்ய தாங்கள் பணியமர்த்தப்பட்டதாக தெரிவித்தனர்.
18 வயதிற்கு உட்பட்டவர்களை வேலையில் பணிஅமர்த்தக் கூடாதென்று அரசாணை உள்ள நிலையில், ஆவின் தொழிற்சாலையில் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நமது செய்தியாளரிடம் பேசிய போது...
“குழந்தை தொழிலாளர்கள் என்பவர் 14 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் யாரும் இங்கு வேலையில் இல்லை. எந்த ஆவினிலும் இல்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களும் இல்லை. 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகே இங்கு வேலையில் சேர்ப்பது வழக்கம்.
இங்கு இதற்கு முன் வேலை பார்த்த ஒரு சில தொழிலாளர்களுக்கும் இங்கிருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏதோ பிரச்னை இருந்துள்ளது. அதில்தான் இப்படியான செய்தி வந்துள்ளது. உண்மையில் இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. இதில், எந்த உண்மைத் தன்மையும் இல்லை. நானே அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து பார்த்துள்ளேன்” என்றார்.
அமைச்சரின் பேட்டியை, இங்கே காண்க: