ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ததுபோல, டிக் டாக் செயலியை தடை செய்வது உறுதி என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 9 புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “மரண விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டை தடை செய்தது போல, தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படுவது உறுதி. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் கண்டனத்திற்குரியது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது. அந்த அளவிற்கு மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை வேரறுக்கவேண்டும்” என்றார்.
சில நாட்களுக்கு முன்னர், பல்வேறு ஆபாச செயலுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் வழிவகுப்பதால் ‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய அரசு ஆராய வேண்டும் என எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி சட்டசபையில் கோரிக்கை வைத்தார். அப்போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன், ‘டிக் டாக்’ செயலியை தடை செய்வது குறித்து மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவர் உறுதியாக ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.