கர்நாடகாவில் குட்கா விற்க தடை இல்லை என்பதால் தமிழகத்தில் கடத்தல் நடக்கிறது என்றும், அதனை கட்டுப்படுத்தி விரைவில் கஞ்சா இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் புதிதாக ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் உட்பட 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும்” என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “மொத்தமாக சிகரெட் தயாரிக்க 60 கோடி மரம் வெட்டப்பட்டுகிறது. 20 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 3,500 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும். பான்பராக், குட்கா விற்க கர்நாடகாவில் தடை இல்லை என்பதால் பெங்களூருவில் இருந்து காய்கறி வண்டியில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் போதை பொருட்கள் தாராளமாக கிடைத்தது. அதை ஆதாரத்துடன் சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். அதற்கு அப்போதைய அரசு 21 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய நினைத்தது. ஆனால் நிதிமன்றத்தில் நல்ல நீதிபதிகள் இருந்ததால் நீதி கிடைத்தது. இந்த அரசு, கடந்த அரசு போல அல்ல. போதை பொருட்கள் விற்பனையில் கண்டிப்புடன் செயல்படும்.
கல்வி நிறுவனங்களில் போதை பொருட்களை தடை செய்ய, அவை அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் போதை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 13,080 பள்ளிகளில் தொடர் புகையிலை ஒழிப்பு கண்காணிக்கப்படுகிறது. 1,344 கல்லூரிகள் புகையிலை இல்லா நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு பயந்து மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு பயந்து போதை பொருட்களை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் நிறுத்த வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நிறுவனத்தின் கோவை கிளையில் மதுபானத்தில் ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையறிந்து மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால், தயாரிப்பு நிறுவனமே அதனை ஒப்புக்கொண்டது. பின் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் பெரிய நபர்களிடம் இருந்து கடையை திறக்க சிபாரிசு வருகிறது. ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அக்கடை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இந்த பிரபல நிறுவனத்தின் கடைகள் சென்னை மட்டுமல்லாமல், மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. தவறை உணர்ந்து இப்படியானவர்கள் திருந்தி செயல்பட வேண்டும்.
நாட்டு புகையிலை விற்பனைக்கு அனுமதியளிக்க வேண்டி புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் சிலர் விவசாயிகள் என்று தங்களை அறிமுகப்படுத்தி வந்து அரசிடம் கோரிக்கை விடுத்தனர். புகையிலை உற்பத்தி செய்யப்படுபவர்களும் தங்களை விவசாயிகள் என தெரிவிப்பது நகைப்புடன் உள்ளது
தமிழ்நாட்டை பொறுத்தவரை 9.3 % பெண்களும், 31% ஆண்களும் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். 35 ஆண்டுகளாக புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டம் இயற்றப்பட்டு இத்தனை ஆண்டுகளை கடந்த பின்பும்கூட, புகையிலை பயன்படுத்தன் மூலம் 2,500 பேர் தினமும் உயிரிழக்கின்றனர். 30 மாவட்டங்களில் 6 ஆயிரம் கல்வி நிறுவனங்களில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் 2.10 கோடி மதிப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்