"விமானப்படை கோரியதற்கு மேலாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டன" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விமானப்படை சாகச நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்முகநூல்
Published on

சென்னை மெரினா கடற்கரையில், இன்று விமானப்படை தினத்தையொட்டி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை நேரில் காண 10 முதல் 15 லட்சம் மக்கள் சென்னை கடற்கரையில் கூடினர். மெரினாவில் மட்டுமே 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

ஆனால், மக்கள் பாதுகாப்பாக நிகழ்விடத்திற்கு வருவதற்கோ, நிகழ்விடத்தில் அவர்கள் வெயிலில் சிரமப்படாமல் இருக்கவோ எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால் பலரும் வெயிலின் தாக்கத்தால் தவித்துப்போனர். குடிக்க தண்ணீர்கூட இல்லை என அங்கிருந்த மக்கள் வேதனை தெரிவித்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விமான சாகச நிகழ்ச்சி: நால்வர் மரணம்... போக்குவரத்தால் ஸ்தம்பித்த சென்னை... குளறுபடி நடந்தது எங்கே?

இதனால், 5 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.. இந்நிலையில், எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக அண்ணாமலை,பாஜக தமிழிசை சௌந்தரராஜன், பாமக அன்பு மணி ராமதாஸ் என பல எதிர்க்கட்சி தலைவர்கள் தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று கண்டித்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், விமானப்படை சாகச நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்நிகழ்ச்சியை முறையாக திட்டமிட்டு நடத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் பலமுறை நடத்தப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் மாநில அரசின் சார்பில் இரண்டு சுகாதார குழுக்கள், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியில் சோகம்.. 5 பேர் உயிரிழப்பு - யார் பொறுப்பு?

40 ஆம்புலன்ஸ்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகள், 65 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். தற்காலிக கழிவறைகள், குடிநீர் வழங்கலுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. விமானப்படை கோரியதற்கு மேலாகவே தமிழக அரசால் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டன.” என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மீதான விமர்சனங்கள் தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், “நேற்று இந்திய விமானப்படை, மெரினாவில் நடத்திய சாகசக் காட்சிகள் ஒருங்கிணைக்கப் பட்ட முறை சரியல்ல, ரயில்கள் இயக்கப்படவில்லை, 5 பேர் இறந்து விட்டனர், மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என இதையும் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

நானும் அந்த சாகசத்தை காண சென்றிருந்தேன், 3 கிமீ நடந்து, பார்த்து, மீண்டும் நடந்து வீடு வந்து சேர்ந்தோம்.

முக்கியமான கேள்விகள்.

1. 10லட்சம் பேர் கூடுவார்கள் எனும் பொழுது, அனைவரது வாகனங்களையும், சாகசம் நடத்தும் இடத்திற்கே அனுமதிக்க முடியுமா?

2. முன்னரே இறங்கி விட்டு கடைசி 2 அல்லது 3 கிமீ நடந்து தானே செல்ல முடியும்.

3. நேற்று வெயில் 36டிகிரி அளவு கொளுத்தியது, அந்த வெயிலில் நடந்து சென்று, உச்சி வெயிலில் நின்று தான் இந்த சாகசத்தை பார்க்க முடியும். அதற்கான குறைந்த பட்ச முன்னேற்பாடுகளுடன் தானே செல்ல வேண்டும். தொப்பி, தண்ணீர், குடை.

4. தேவையான அளவு ஆம்புலன்ஸ்கள் இருந்தது, வெயிலில் மயக்கம் அடைந்தோர்க்கு முதலுதவி சிகிச்சைகள் மொடுத்த வண்ணம் இருந்தனர்.

5. எல்லோருக்கும் ஒரு ஆசை தான், நேரில் பார்த்து விட வேண்டும் என்று. இந்த வெயில் சூழல், அவர்களின் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பதனை உணர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். சுமார் 3 மணி நேரமாவது, உச்சி வெயிலில் நிற்க நடக்க வேண்டும். 5. 5 பேரின் இறப்பு மிகவும் வருத்ததிற்கு உரியது, அவர்களின் உடல் நலம் என்னவாய் இருந்தது என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. போதுமான ரயில்களை ஏன் இயக்கவில்லை என்பதற்கு தென்னக ரயில்வே விளக்கமளிக்க வேண்டும்.

7. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரு குறுகிய காலத்தில் சென்று வரக்கூடிய கட்டமைப்பா அங்கு உள்ளது?

8. நம் காவலர்கள் சிறப்பான பணியை செய்தனர், முதலுதவி சிகிச்சை முதல், போக்குவரத்து ஒழுங்கு வரை கடமையுணர்ந்து செயலாற்றினர்.

9. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பான்மையான சென்னைவாசிகள், நிகழ்ச்சியை கண்டு களித்து மன நிறைவோடே சென்றனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னென்ன வசதிகள் இருக்கும், வசதி குரைபாடுகல் இருக்கும் என அறிந்தே நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதனை ஒன்றிய அரசு தானே நடத்தியது, அவர்கள் பங்கு தான் என்ன?

இது ஏதோ ஒரு நிர்வாகத் தோல்வி என சித்தரிக்க முயல்பவர்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறொரு நோக்கமும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com