சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த மையத்திலிருந்து, நீட் தேர்வெழுதிய மாணவர்களை அலைபேசியில் அழைத்து உளவியல் நிபுணர்கள் கவுன்சிலிங் நடத்த உள்ளனர். இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2021 மே அன்று முதலமைச்சர் அவர்களால் 104 மருத்துவ சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மையம் 24 மணி நேரமும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை, தற்கொலை தூண்டுதலை தீர்க்கும் வகையில் 40 மனநல ஆலோசகர்கள் ஈடுபாட்டுடன் பணியை செய்து வருகிறார்கள். இந்த மையத்திற்கு 2022 ஆம் ஆண்டு வரை ஆயிரத்து நூறு அழைப்புகள் வந்துள்ளது. 60 மனநல ஆலோசகர் சேவை நடத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நோக்கத்தின்படி இந்த ஆண்டும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 458 பேர் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதி இருந்தார்கள் அப்படி எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனைகள் தரும் வகையில், அவர்களுடன் கலந்தாய்வு என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, அதன் மூலம் இதுவரை 54 ஆயிரத்து 374 மாணவ- மாணவிகளிடம் பேசப்பட்டுள்ளது. அதில், 177 மாணவ மாணவியர் மன அழுத்தமான நிலையில், உள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது,
அவர்களிடம் தொடர்ந்து பேசி வந்ததுடன் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சியர்களிடம் பேசி அவர்களது இல்லங்களுக்குச் சென்று அவர்கள் மன அழுத்தத்தை போக்க பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்பட்டு வருகிறது தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள இருக்கிறோம். 78,693 பேர் அதாவது 54 சதவீதம் மாணவ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சியாகாத 65 ஆயிரத்து 823 மாணவர்கள் மாணவிகளின் பட்டியலை கேட்டுள்ளோம்.
அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், அவர்களுக்கு அடுத்தடுத்து செய்யப் போகின்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறோம். இந்த ஆண்டு நீட் தேர்வை பொருத்தவரை பெரிய அளவில் தமிழகத்தில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது, பிரபஞ்சன் என்ற மாணவர் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்று மகத்தான சாதனை படைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் முதல் பத்தில் நான்கு இடத்தை நமது தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இன்னமும் கூடுதலாக சாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து மாணவ மாணவியர்கள் கூடுதலாக படிக்கும் எண்ணத்தை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதித்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒடிசா மாநிலமும் நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.
கடந்த வாரம் மத்திய உயர்கல்வித துறை நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டிருக்கிறது. இரண்டு மூன்று தினங்களில் விளக்கம் அளிக்கப்படும். எனவே எங்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவது அரசாங்கத்தின் கடமையாகும், வெற்றி சாதாரணமாக கிடைத்த ஒன்றாக இருக்காது, அந்த வகையில்தான் வெற்றி பெற்ற மாணவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் வாழ்த்துகிறோம், இன்னும் சில வாரங்களில் கலந்தாய்வு துவங்க உள்ளது, தனியார் கல்லூரிகளில் 450 சீட்டுகள் கூடுதலாக இந்த ஆண்டு வருகிறது, 50 அரசு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 500 சீட்டுகள் அதிகப்படுத்தியுள்ளது,
செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை என்ற தகவல் பொய்யானது நேற்று 25 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது இன்றும் அறுவை சிகிச்சைகள் தடை இன்றி நடைபெற்ற வருகிறது, செந்தில் பாலாஜி மருத்துவம் எடுத்துக் கொள்வது அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களை கட்டாயப்படுத்தி ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வற்புறுத்த முடியாது,
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்னை மக்கு என்று கூறியுள்ளார் நான் மக்காகவே இருந்து கொள்கிறேன் செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றார்