தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி-க்களாக உள்ள முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யநாத் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தலா மூன்று எம்.பி-க்களை பிரித்துக்கொள்ள முடியும்.
இதைத்தொடர்ந்து திமுக சார்பில் களமிறங்க போகும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதாவது, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதாவது, அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கே.பி முனுசாமி அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக சீட் கேட்டு வந்த நிலையில் இப்போது ஜி.கே.வாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது பேசுப் பொருளாக மாறியுள்ளது. அப்போது தேமுதிக வருங்காலங்களில் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என சந்தேகம் எழுப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார்.
அவர் பேசும் போது, “தமாகாவிற்கு மாநிலங்களவை ஒதுங்கியது ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவு. அதிமுக ஒரு ஆலமரம். அவை எல்லோருக்கும் நிழல் தரும். எல்லோருக்குமே வாய்ப்புகள் வரும் போது அதனை எல்லோரும் செய்ய கூடிய ஒன்றுதான்.திமுக கூட்டணி கட்சிகளை உதாசினப்படுத்துவது போல் அதிமுக செய்யாது. தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை.அதிமுகவை பொறுத்தவரை அதன் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாஜக அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு நாங்கள் குழந்தைகள் இல்லை. அனைத்தையும் சிந்தித்து செய்கிறோம்” என்றார்.