“குழந்தை திருமணங்களை விட சிறார்கள் காதலித்து தாங்களாக செய்து கொள்வது அதிகம்” - அமைச்சர் கீதா ஜீவன்

தமிழகத்தில் குழந்தைகள் திருமணங்களைவிட சிறார்கள் தானாக விரும்பி செய்துகொள்ளும் திருமணமே அதிகரித்து உள்ளது என நெல்லையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
geetha jeevan
geetha jeevanpt web
Published on

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல அளவிலான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தினை திறன்பட செயல்படுத்துவதற்கான பயற்சி பட்டறை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை தொடர்பான விளக்கங்கள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கும் திட்டம் 2012ல் கொண்டுவரப்பட்டாலும் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி 2021 மே மாதத்திற்கு பிறகு இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே இரண்டு நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. துறை மூலம் சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறையில் புறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com