சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால் ஓஎம்ஆர் ராஜிவ்காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் ஆகஸ்ட் 30ஆம் தேதிமுதல் நிறுத்தப்படுவதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்திருக்கிறார். பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வருவதென்றால் பல்வேறு சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினரான எங்களிடம் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்துவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 5 சுங்கச்சாவடிகளை அகற்றவது குறித்து கூட்டத்தொடர் முடிந்த பின்பு ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 4 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.