“எதிர்க்கட்சித் தலைவர் போல் பேச கவர்னரை தூண்டிவிடுகிறதா மத்திய சர்கார்?” - துரைமுருகன்
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, “கலைஞர் அவர்களின் ஆற்றல் ஸ்டாலின் அவர்களிடம் என்ன உள்ளது என சிலர் கேட்கக்கூடும். இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திக் காட்டும் ஆற்றில் தளபதி ஸ்டாலினிடம் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார் அவர். கொம்பாதி கொம்பனாலும் விரல் நீட்டி குற்றம் கூற முடியாமல் ஆட்சி நடத்தி காட்டுகிறார். சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பிய தீர்மானங்களை ஆளுநர் பார்த்துவிட்டு மாறுதல்கள் கூறி திருப்பி அனுப்பினாலும், அதை நாம் மாற்றாமல் அவருக்கு அனுப்பலாமென்றும்; அப்போதும் அவர் கையெழுத்து போடவேண்டும் என்றும் இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது.
‘திராவிட மாடல் என்பது ஒரு அரசியல் கோஷம்’ என கூறுகிறார் ஆளுநர். கோஷம் என்பது ஒரு உணர்ச்சி இல்லையா? 'ஒரு பாரதம் ஒரு இந்தியா' என்பது ஒரு கோஷம் இல்லையா? கவர்னர் அவர்களே நீங்கள் பீகார்காரர். திராவிட மாடல் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியாது.
தமிழக அரசை திறம்பட நடத்தி வரும் நாங்கள் எதிர்க்கட்சியை கூட சமாளித்து விடுகிறோம். ஆனால், ஒரு கவர்னர் எதிர்க்கட்சித் தலைவர் போல் அரசை பற்றி பேசுவதை மத்திய சர்கார் வேடிக்கை பார்க்கிறதா அல்லது அவரை பேச தூண்டி விடுகிறதா என தெரிய வேண்டும் ”என்று பேசினார்.