கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரங்களில் ஒன்று, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பதவி. விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், தற்போது அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் வெளியான செய்திகள், மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றன.
திமுக இளைஞரணியின் 45ஆவது ஆண்டு தொடக்க விழாவிலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேடையில் பேசிய நிர்வாகிகளும் அதனை வலியுறுத்தினர். இதன் பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படப் போவதாக வெளியான செய்தி வதந்தி என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், அதிமுகவுக்குள் நடப்பதுதான் நாடகம் எனவும் தெரிவித்தார்.
துணை முதல்வர் பதவி உங்களுக்கு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக ஒருவர் கூற, அதற்கு பதிலளித்த துரைமுருகன், “துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என சொல்லுவார்கள். அப்படி கிடையாது, நிர்வாகத்தில் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்று ஒன்று இருக்கிறது. கூட்டு மந்திரி சபையாகத்தான் நாங்கள் இயங்குகிறோம். தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு சாதகமாகத்தான் செல்வோம்” என தெரிவித்துள்ளார்.