சின்னதம்பி யானையை துன்புறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சாதுவாக மாறிவிட்ட சின்னதம்பி யானையை யானை நிபுணர் அஜய் தேசாய் பரிந்துரையின்படி, முகாமிற்கு கொண்டு செல்லலாம் என திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சின்னதம்பியை காட்டிற்கு அனுப்பவும், செங்கற்சூளைகளை அகற்றவும் கோரி அருண் பிரசன்னா, முரளிதரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் இன்று மதியம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க இருப்பதால் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளை கொடுத்து, நன்றாக பழக்கியபின் ஏன் மீண்டும் காட்டிற்குள் அனுப்ப கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் இதுதொடர்பாக, யானை நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவித்தனர்.
இதனிடையே சின்னதம்பி யானையைத் துன்புறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சின்னதம்பி யானையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினசரி கதாநாயகன் சின்னதம்பி என்று கூறினார். சின்னதம்பி யானை உள்ளிட்ட எந்த விலங்கையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு இல்லை என்றும் சின்னதம்பி யானையை வனத்திற்குள் விடுவதா என்பது குறித்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவுள்ளதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.