தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. கூலித் தொழிலாளியான இவருக்கு, ஆஷா என்ற மகள் இருக்கிறார். 12ம் வகுப்பு முடித்துவிட்டு பி.டெக். படித்து வரும் ஆஷா, குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் உயர்கல்விக்கு உதவியாக லேப்டாப் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகலில் திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரில் சென்று கொண்டிருந்தார்.
இதற்கிடையே, திருச்செந்தூரை அடுத்துள்ள அடைக்கலாபுரம் பகுதியில் சாலையோர டீக்கடையில் கருப்பட்டி காபி குடிக்க நினைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காரை நிறுத்திவிட்டு அவரது ஆதரவாளர்களுடன் டீ கடைக்குச் சென்றார். அப்போது, கருப்பட்டி காபி ஆர்டர் செய்துவிட்டு கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்தநேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அந்தோணி பிச்சையின் மகள் ஆஷா, அமைச்சர் கார் நிற்பதை கண்டும், அமைச்சர் அங்கு அமர்ந்திருப்பதை கண்டும் உடனடியாக ஒரு வெள்ளை பேப்பரில் தனது உயர் படிப்புக்கு லேப்டாப் தேவை என்பதை தெரிவித்து, அதற்கு உதவி செய்யுமாறு 4 வரியில் கோரிக்கையை எழுதி அந்த மனுவை ஒரு கவரில் வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் கோரிக்கை மனுவை வாங்கிய மறுகணமே, ஏழை மாணவி ஆஷாவிடம் படிப்பு விவரத்தை கேட்டறிந்து, லேப் டாப் வாங்க எவ்வளவு பணம் தேவை என கேட்டார். அந்த மாணவி 75 ஆயிரம் தேவை என கூறியதும், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அந்த இடத்திலேயே தனது உதவியாளரை அழைத்து ரூபாய் 75 ஆயிரம் பணத்தை பெற்று மாணவி ஆஷாவிடம் கொடுத்து “நல்லா படிக்கணும்மா. இது முதலமைச்சர் கொடுக்கிற பணம்” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
படிப்புக்காக லேப்டாப் வாங்க முடியாமல், கோரிக்கை மனுவை கொடுத்த நிலையில், ஒரு கணம் கூட தாமதிக்காமல் உதவிசெய்த அமைச்சரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.