சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடத்தினார்.
இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ், சேகர் பாபு, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உட்பட பல்வேறு அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நான் எச்சரிக்கையோடு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதுவும் மக்களாட்சி மூலம் பதவிக்கு வந்து ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகின்ற ஒன்றிய அரசாங்கத்தின் ஆட்சியாளர்களுக்கு அண்ணா வழியில், அண்ணா மொழியில் ஒன்று சொல்கிறேன். ‘கோட்டையைச் சுற்றி ஆழியை அமைத்து, அதில் மத குருமார்கள் என்கிற முதலையை வளர்த்து, கோட்டையின் மீது பரம்பரை என்கிற கொடி மரம் நாட்டி, அதில் படோடம் என்ற கொடியைப் பறக்கவிட்டு, பார்ப்போர் கண் கூசப் பளபளக்க, கேட்போர் செவி குடைய அட்டகாசம் செய்த கொடுங்கோலர்கள் எல்லாம் சிதைந்து போனது புராணம் அல்ல. அது வரலாறு. இந்த வரலாற்றினை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், I.N.D.I.A. கூட்டணியை வழி நடத்துகின்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாதனை படைப்பார்’
I.N.D.I.A. கூட்டணியில் நீங்கள் (முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு) யாரை கை காடுகின்றிர்களோ அவர்கள்தான் அடுத்த பிரதமர். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களை நோக்கி கை காட்டுகிறது. அப்படி வாய்ப்பு வந்தால் தட்ட வேண்டாம் முதல்வரே... அதையும் ஒரு கை பார்த்து விடுவோம். ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் முதல் இடத்திற்குக் கொண்டு வரப் போராடுவோம்.
முதல்வர் வகுத்துத் தந்த பாடம், அவர் சொல்லிக் கொடுத்த பாதையில் நாங்கள் செல்வோம். எங்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. இளைஞரணி செயலாளர் கூறுகின்ற கட்டளையை ஏற்று வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நம்முடைய நாட்டை காக்கின்ற போருக்கு நாம் தயாராக வேண்டும்" என்றார்.