தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் மருத்துவமனையிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு லேசான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த, அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கரன், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் திமுகவினர் மருத்துவமனைக்கு வந்தனர்.
தொடர்ந்து உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, பரிசோதனைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.