புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புரிந்துணர்வு கையெழுத்தானது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...
“ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் நம் மாநிலத்துக்கென ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிஎம்ஸ்ரீ மற்றும் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி ஆகியவற்றை சம்பந்தமே இல்லாமல் தொடர்பு செய்து அழுத்தத்தை தருகின்றனர். நமக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை, நான்காவது தவணை 1,800 கோடி மட்டுமல்ல... அடுத்த ஆண்டு தரவேண்டிய 3,800 கோடி ரூபாயையும் இதில் தொடர்புப்படுத்துகின்றனர்.
இது தனி, அது தனி. இரண்டையும் லிங்க் செய்வது போல செய்கின்றனர். அமைச்சர் என்பதைத்தாண்டி திமுக-காரனாக கண்டிப்பாக இதை எதிர்ப்பேன். இதில் தமிழக முதலமைச்சர் என்ன ஆலோசனை சொல்கிறார்கள் எனக்கேட்டு, நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வோம்.
மாநில கல்விக் கொள்கையை அதனால்தான் உருவாக்குகிறோம். ஆரம்பத்தில் இருந்து தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகிறோம். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியதுதான் எங்களுடைய எண்ணம். அதை நோக்கிதான் நாங்கள் செயல்படுகிறோம்
மத்திய அமைச்சர் கூட ‘இதை ஏன் எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டார். இது மாணவச் செல்வங்களுக்கானது. இதில் அரசியல் செய்யக்கூடாது என அவரை நேரில் சந்திக்கும் போது சொன்னேன். அவர் ‘நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்களோ சொல்லுங்கள்’ என்று சொன்னார்.
ஆனால் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற்று கருத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மாநில உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு இதுபோன்று அழுத்தத்தை தருகிறது” என்றார்.